சேலம் மல்லூர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க மக்கள் ஆர்ப்பாட்டம்
சேலம் மல்லூர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரி, 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சேலம் மல்லூரில் இருந்து வீரபாண்டி செல்லும் பிரதான சாலையில் உள்ள வேங்காம்பட்டி பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைத்து தரக்கோரி, 10 கிராம மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையாக உள்ளது. ஏற்கனவே இருக்கும் ரயில்வே கடக்கும் சாலையை தினசரி சுமார் 10 கிராம மக்கள் விவசாய வேலைக்கும், மாணவர்கள் பள்ளி கல்லூரி செல்வதற்கும், மருத்துவமனைக்கு நோயாளிகள் ஆம்புலன்ஸ்சில் செல்வது என ஒரு நாளைக்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் கடந்து செல்கின்றனர்.
இவ்வழியாக சேலத்தில் இருந்து கரூர், திண்டுக்கல்,மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில் தினசரி செல்கின்றது. இதனால் ரயில்வே சாலையை கடந்து செல்வதற்கு சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் ஆவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
இந்த நிலையில் ரயில்வே மேம்பாலம் அமைத்து தரக்கோரி மல்லூர் தபால் நிலையம் முன்பாக 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு விரைந்து பாலம் அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மேம்பாலம் அமைக்காத பட்சத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது தடுப்பணை கட்டும் செயலுக்கும், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் கர்நாடக அரசின் செயலுக்கும் ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக கண்டனம் தெரிவித்தனர்.