சேலம் கலெக்டர் ஆபீஸில் காய்கறி விற்பனை - கவனத்தை ஈர்த்த விவசாயிகளின் போராட்டம்
உழவர் சந்தைகளை திறக்க வலியுறுத்தி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து, விவசாயிகள் நூதனமாக போராடி, கவனத்தை ஈர்த்தனர்.;
உழவர் சந்தைகளை திறக்கக்கோரி, விவசாயிகள் நூதன முறையில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு, கடந்த மே 15 ஆம் தேதி முதல், ஒருசில தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டு வந்தது. அதே நேரம், கொரோனா பாதிப்பு சேலம் மாவட்டத்தில் குறைந்துள்ளதால், இன்று முதல் மேலும் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளையும் திறந்து விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி, விவசாயிகள் கைகளில் காய்கறிகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வந்தனர். பின்னர், காய்கறிகளை எடுத்து வந்து, நூதன முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பின்னர், சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பத்து ரூபாய் காய்கறிகள் இரண்டு ரூபாய்க்கு என்று கூறி, விற்பனை செய்து நூதன முறையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். உழவர் சந்தையில் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஏற்படுத்தி, காய்கறிகளை விற்பனை செய்ய அனுமதி அளித்தால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விற்பனை செய்ய தயாராக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். சேலம் மாவட்டத்தில் தினசரி 60 சதவீதம் காய்கறிகள் விற்பனை ஆகாமல் வீணாவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.