சேலம்: ஆக்சிஜன் தேவை குறைவு... ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு ஓய்வு!
சேலம் மாவட்டத்தில் கொரோனோ நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை குறைந்ததால், அரசு மருத்துவமனை முன்பு ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஓய்வெடுக்கின்றன.
சேலம் மாவட்டத்தில், கடந்த பத்து நாட்களுக்கு முன்பு நோயாளிகள் அனைவருக்கும் ஆக்சிஜன் கூடிய படுக்கை வசதிகள் தேவை என்ற நிலை இருந்தது. சேலம் அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் படுக்கை வசதிக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால், ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே சிகிச்சை அளிக்கும் சூழ்நிலை ஏற்பட்டதோடு, பல மணி நேரம் மருத்துவமனை அனுமதிக்காக ஆம்புலன்சில் காத்திருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் சேலம் அரசு மருத்துவமனை கொரானா சிகிச்சை மையம் முன்புறம் தினந்தோறும் 20 க்கும் மேற்ப்பட்ட ஆம்புலன்ஸ்கள், நோயாளிகளுடன் மணிக்கணக்கில் காத்திருக்கும். இதனால், ஆம்புலன்ஸ்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டு இரவு பகலாக ஆம்புலன்சுகள் வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையால், இரும்பாலையில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. தொற்று பாதிக்கப்பட்டவர்கள் ஆங்காங்கே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கவும், அவர்களுக்கு ஆக்சிஜன்படுக்கை வசதி கூடிய மருத்துவமனைகளில் இடம் பெற்றுத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால், தற்போது சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் தேவைப்படக்கூடிய நோயாளிகள் வருகை குறைந்துள்ளது.
கடந்த மாதம் சேலம் அரசு மருத்துவமனை கொரானா சிகிச்சை பிரிவு முன்பு ஆம்புலன்ஸ்கள் கிடைக்காத நிலை இருந்த சூழல் மாறி, இப்போது, இரவு பகலாக ஓய்வின்றி உழைத்த ஆம்புலன்ஸ்கள், ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. சேலம் அரசு மருத்துவமனை முன்பு 50க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் வரிசையாக வாடகைக்காக காத்திருக்கின்றன.
எனினும், சேலம் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் சற்று குறைந்து வருவது, மக்களுக்கு நம்பிக்கையையும் தெம்பையும் தந்துள்ளது.