ஆசிட் வீச்சு சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சேலத்தில் ஆசிட் வீச்சு சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;
கைது செய்யப்பட்ட ஏசுதாஸ்.
சேலம் குகை பகுதியை சேர்ந்த ஏசுதாஸ் என்பவருக்கும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த ரேவதி என்பவருக்கும் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். ஏசுதாஸ் சேலம் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக உள்ளார். மனைவி மீது சந்தேகப்பட்டு ஏசுதாஸ் அடிக்கடி ரேவதியிடம் தகராறு செய்துள்ளார். இதனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மற்றும் உறவினர்கள் அவ்வபோது சமாதானம் செய்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் கணவருடன் சேர்ந்து வாழ விரும்பாத ரேவதி சில மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து நாமக்கல்லில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால் தன்னுடன் மனைவியை சேர்த்து வைக்கும்படி டவுன் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இயேசுதாஸ் புகார் அளித்துள்ளார். இதையடுத்து டவுன் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் குடும்பநல ஆலோசனைக்காக ரேவதி நேற்று வந்துள்ளார். ஒரு மணி நேரம் நடந்த ஆலோசனையில் ரேவதி, ஏசுதாஸ் உடன் வாழ விருப்பமில்லை என திட்டவட்டமாக கூறிவிட்டு அங்கிருந்து தனது தாயார் வீட்டிற்கு செல்வதற்காக பழைய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற இயேசுதாஸ் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை ரேவதியின் மீது ஊற்றினார். இதில் ரேவதியின் முகம் மற்றும் முன் பகுதி முழுவதுமாக வெந்தது. மேலும் ரேவதியின் தாயார் மீதும் ஆசிட் பட்டதில் சிறு காயங்கள் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 70 சதவிகித தீக்காயங்களுடன் ரேவதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே மனைவியின் மீது ஆசிட் ஊற்றி கொன்ற கணவர் இயேசுதாஸ் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.