சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்
சேலத்தில், அடிப்படை வசதி கோரி சேறும் சகதியுமான சாலையில், நாற்றுநட்டு பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.;
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மாபேட்டையில், நாசர்படையாச்சி காடு மற்றும் பூங்காடு காலனி பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில், 30 ஆண்டுகளாக சாலை வசதி, சாக்கடை வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
கடந்த வாரம், சேலம் மாநகர பகுதியில் பெய்த மழை நீரானது 10 நாட்களாகியும், இப்பகுதியில் முழுமையாக வடியாமல் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனை மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாத நிலையில், சேறும் சகதியுமான சாலையில், அப்பகுதி மக்கள் நாற்றுக்களை நட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.