மனநல மறுவாழ்வு மையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்: சேலம் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
மணியனூரில் உள்ள மனநல மறுவாழ்வு மையத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை, சேலம் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.
சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலம், மணியனூர் சரவணபவன் நகர் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையம் உள்ளது. இங்கு, நடைபெற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரில் சேலம் மைண்ட் கேர் மையத்தில் உள்ள மனநலம் குன்றியவர்கள், குரங்குச்சாவடி ஓமலூர் மெயின் ரோடு பகுதியில் மருத்துவ பிரதிநிதிகள், அம்மாப்பேட்டை ஸ்ரீ ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் சேலம் அரிமா சங்கத்தினர், ரயில்வே மருத்துவமனை வளாகத்தில் ரயில்வே பணியாளர்கள், சேலம் குஜராத்தி கல்யாண மண்டபத்தில் சேலம் சுகாதார குழுவினர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மண்டல அலுவலகத்தில் குடிநீர் வாரிய பணியாளர்கள், அஸ்தம்பட்டி சந்தனமரக்கிடங்கில் வனத்துறை பணியாளர்கள், அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் மாநகராட்சிப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
அவ்வகையில் இன்று 3785 நபர்களுக்கு சளி தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.