மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை முயற்சி
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி;
தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சட்டிஸ்கர் மாநிலத்திலிருந்து கடந்த மாதம் 28ஆம் தேதி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 183 பேர் சேலம் வந்தனர். இவர்கள் சேலம் லைன்மேடு ஆயுதப்படை மைதானம் மற்றும் குமாரசமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள முகாம்களில் தங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை லைன்மேடு ஆயுதப்படை மைதான காவலர் சமுதாய கூடத்தில் தங்கியிருந்த வீரர் அஜிஸ்குமார் புட்டியா என்பவர் தன்னிடமிருந்த மெஷின் கன் எனப்படும் நவீன ரக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனைக் கண்ட சகவீரர்கள் உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாடைப்பகுதியில் பலத்த காயமடைந்த அஜிஸ்குமார் புட்டியாவுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலம் மாநகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒடிசாவை சேர்ந்த அஜிஸ்குமார் புட்டியா குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.