சேலம் டாஸ்மாக் கடையில் மது பிரிப்பு மோதல்: வாலிபர் பாட்டிலில் குத்திக்கொலை
சேலம் டாஸ்மாக் கடையில் மது பிரிப்பு மோதலில் வாலிபர் ஒருவர் மதுபாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.;
சேலம் அன்னதானப்பட்டி சண்முகநகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(35) கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் ஜெயக்குமார்(40) மூட்டை தூக்கும் தொழில் செய்து வருகிறார்.
இருவரும் சேர்ந்து வேலுநகர் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுவை பிரிப்பதில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது ஜெயக்குமார் மதுவை கூடுதலாக குடித்ததால் கோவிந்தராஜ் தாக்கியுள்ளார்.
இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில் ஜெயக்குமார் மதுபாட்டிலை எடுத்து கழுத்தில் குத்தியதில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதனையடுத்து தகவலறிந்து வந்த அன்னதானப்பட்டி காவல்துறையினர் கோவிந்தராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை செய்த ஜெயக்குமாரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நண்பர்களுக்கு இடையே மது பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் கொலை சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.