நீதிபதிகள், வக்கீல்களுக்கு தடுப்பூசி போட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
வக்கீல் சங்க நிர்வாகிகள் தேர்தலில் ஓட்டுப்போட வரும் நீதிபதிகள், வக்கீல்களுக்கு தடுப்பூசி போட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை.
சேலம் வக்கீல் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் இன்று நடக்கிறது. இதில் 1,300 பேர் வாக்களிக்க உள்ளனர்.
இந்த தேர்தலுக்கு வக்கீல் சங்க அலுவலகத்தை பயன்படுத்தி கொள்வதற்கு அனுமதி கேட்டு தேர்தல் நடத்தும் அதிகாரியான மணிவாசகம் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் எழுதினார். தற்போது கொரோனா பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அனுமதி வழங்கினர்.
இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரனை தேர்தல் நடத்தும் குழுவினர் சந்தித்து பேசினர். இதையடுத்து இன்று ஓட்டுப்போட வரும் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு கொரோனா தடுப்பூசிகளான முதல் மற்றும் இரண்டாம் தடுப்பூசிகள் போடுவதற்கு ஏற்பாடுகளை செய்வதாக மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.
நீதிமன்ற வளாகத்தில் உள்ள நூலகத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வதற்கு, வழக்கறிஞர்கள் தங்களது ஆதார் அட்டையை கொண்டு வருமாறு வழக்கறிஞர் மணிவாசகம் கேட்டுக்கொண்டுள்ளார்.