சேலத்தில் தடுப்பூசி டோக்கனுக்காக பணியாளரை விரட்டிச் சென்ற மக்கள்- கலெக்டர் நேரில் சமாதானம்!
சேலம் குமாரசாமிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், தடுப்பூசி டோக்கன் பெற கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. டோக்கன் தர முயன்றவரை விரட்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் குமாரசாமிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் 200 நபர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்ததால் பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் முந்திக் கொண்டு டோக்கன் வாங்க முற்பட்டனர்.
அத்துடன் நிற்காகம்ல், டோக்கன் வழங்கும் நபரை ஒருசிலர் துரத்தி சென்று டோக்கன் வாங்க முயற்சித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உள்ளே நுழைய பொதுமக்கள் முற்பட்டதால், பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறை உதவியுடன், சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களை சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனால், பொதுமக்கள் சமாதானம் அடையாமல், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், நேரில் வந்து பொதுமக்களிடம் பேசி சமரசம் செய்தார். பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இருப்பதால் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நின்று செலுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினர். இதையடுத்து காவல்துறையினர் பொதுமக்களை சமூக இடைவெளியை கடைபிடித்து நிற்க வைத்தனர். இதனால் சிறிது நேரம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.