சேலத்தில் நோய் தடுப்பு பணிகள்: அதிகாரி நேரில் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு பணிகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முகமது நசிமுதீன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சேலம் மாவட்ட நோய் தடுப்பு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள முகமது நசிமுதீன், இன்று சேலம் வந்தார். அதைத் தொடர்ந்து, சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பாதுகாப்பு மையம் மற்றும் தடுப்பூசி மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் கொரோனா சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் கானொலி மூலம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து மருத்துவமனை முதல்வர், மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி இருப்பு குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முகமது நசிமுதீன், சேலம் மாவட்டத்தில் போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் இருப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சேலம் அரசு மருத்துவமனையில், 29 ரெமிடெசிவிர் பாட்டில்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.