அர்ச்சகர்களுக்கு ₹ 4 ஆயிரத்துடன் நிவாரணப்பொருட்கள்: சேலத்தில் வழங்கும் பணி துவக்கம்

மாதசம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு ₹ 4 ஆயிரத்துடன் கூடிய நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணி, சேலம் மாவட்டத்தில் இன்று துவங்கியது.;

Update: 2021-06-18 06:59 GMT

சேலத்தில் மாத சம்பளம் இன்றி பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு நான்காயிரம் ரூபாய் மற்றும் நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வழங்கினார்.

கொரோனா நோய் பெருந்தொற்றினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவில்களில் மாதச்சம்பளம் இன்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தினைப் பாதுகாக்கும் வகையில், உதவித்தொகையாக ரூ. 4,000, மற்றும் 10 கிலோ அரிசி, அத்துடன் 15 வகை மளிகைப்பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. 

அதன்படி சேலம் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், சேலம் சுகவனேஷ்வரர் கோவிலில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் கலந்து கொண்டு, மாநகரில் உள்ள 10 கோவில்களின் அர்ச்சகர்களுக்கு ₹ 4 ஆயிரத்துடன் கூடிய நிவாரணப்பொருட்களை வழங்கினார்.

தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நிலையான மாத சம்பளம் இன்றி பணியாற்றிவரும் 363  அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களுக்கு நிவாரணத்தொகை மற்றும் மளிகைப்பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

Tags:    

Similar News