வெளியே திரிந்தவர்களுக்கு கட்டாய கொரோனா டெஸ்ட்: மனித உரிமைமீறல் என புகார்!
கட்டாய கொரானா பரிசோதனை என்பது மனித உரிமை மீறல்; சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, சேலம் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.;
தமிழகத்தில், தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர மற்றவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அரசு அறிவித்தது. ஆனால் இதனை பொருட்படுத்தாமல் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்களில், பொதுமக்கள் வெளியே வந்து செல்கின்றனர். இதனால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர் .
இதையடுத்து, தேவையில்லாமல் வெளியே திரிபவர்களுக்கு நூதன தண்டனையை போல், கட்டாய கொரானா பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஊரடங்கு விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வெளியே வந்தவர்களை பிடித்து கட்டாய கொரானா பரிசோதனை மேற்கொண்டனர்.
ஆனால், இவ்வாறு கட்டாய பரிசோதனை செய்வது மனித உரிமை மீறல்; இது குறித்து எந்த அரசு ஆணையிலும் அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்று சேலம் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு சீர்திருத்த இயக்க தலைவர் ஜெயசீலன் அளித்த மனுவில், கட்டாய பரிசோதனை செய்த காவல்துறையினர், சுகாதாரத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.