திமுக ஆட்சி மீது குறை சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை: மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சி மீது குறை சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-07 14:45 GMT

சென்னை அறிவாலயத்தில் இருந்து காணொலி வாயிலாக பேசிய முதலமைச்சர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

சென்னை அறிவாலயத்தில் இருந்து காணொலி வாயிலாக பேசிய முதலமைச்சர், கொரோனா காலமாக இல்லாமல் இருந்திருந்தால் மக்களைத் தேடி நேரடியாக வந்திருப்பேன். கட்டுப்பாடுகள் இருப்பதால் நவீன தொழில் நுட்ப வசதியோடு நாம் ஒன்றிணைந்துள்ளோம். அனைத்து இடங்களிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றால் கோட்டையிலிருந்து நான் அறிவிக்கும் திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடையும். நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்பது பேராசையோ; சுயநலமோ இல்லை; இது பொதுநலம்தான் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், சேலம் மாவட்டத்தில் திமுக வெற்றி பெற்றாக வேண்டும். சேலத்தில் சட்டமன்ற தேர்தலில் நழுவ விட்ட வெற்றியை உள்ளாட்சியில் மீட்க வேண்டும். சேலம் மாவட்டம் திமுக  வரலாற்றில் மிக முக்கியமானது. கலைஞரின் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்தது சேலம். அதனால் சேலம் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் வெற்றிபெற வேண்டும் என்றார்.

எதிர்க்கட்சியினர் தற்போது திமுக மீதான விமரசனங்களை குறைத்து கொண்டனர். சேலம் மாவட்டத்திற்கு ஏரானமான திட்டங்களை தீட்டிய ஆட்சி திமுக ஆட்சி என்பதை நெஞ்சை நிமிர்த்தி சொல்லமுடியும். சேலம் இரும்பாலை, அரசு மகளிர் கல்லூரி, கூட்டுக்குடிநீர்திட்டம், அதிநவீன மருத்துவமனை, ஏத்தாப்பூர் மரவள்ளி ஆராய்ச்சி நிலையம், 38 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் என பட்டியிட்ட முதல்வர், கடந்த 8 மாத காலத்தில் சேலம் மாவட்டம் முழுக்க 36,217 மனுக்கள் சிறப்பு முகாம்கள் பெறப்பட்டது. அதில் 10,335 மனுக்கள் அரசால் ஏற்கப்பட்டது; தொடர்ந்து நடைபெற்ற அரசு விழாவில் ரூ 269.31 கோடி மதிப்பில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. சேலம் மாவட்டத்திற்கு செய்த திட்டங்களை அதிமுகவினரால் பட்டியலிட்டு சொல்ல முடியுமா?  சொந்த மாவட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார்? என்று கேள்வி எழுப்பிய முதல்வர், சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரின் தேவையை அறிந்து நிறைவேற்ற கூடிய அரசுதான் திமுக அரசு. அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் 70 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பழனிசாமி எதை கவர்ச்சியான வாக்குறுதி என்று எதை சொல்கிறார். அவரது ஆட்சி காலத்தில் நடந்த கொலை கொள்ளைகளை தொடர்புடையவர்களை கண்டுபிடிக்க முடியாதவர்கள். கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் அப்போது உண்மைகளை சொல்லாதவர்கள் தற்போது பல உண்மைளை சொல்ல முன் வருகிறார்கள். கோடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரிக்க சட்டரீதியாக காவல்துறை விசாரிக்க உரிமை உண்டு. அதன்படி விசாரணை நடக்கிறது. இதுவும் நாங்கள் கொடுத்த வாக்குறுதிதான் இதில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News