ரூ.400 கோடியில் 2 திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு

மாநிலளவில் ரூ.300 கோடியில் நமக்கு நாமே திட்டம் மற்றும் ரூ.100 கோடியில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Update: 2021-12-11 10:45 GMT

மாநிலளவில் ரூ.300 கோடி மதிப்பீட்டிலான நமக்கு நாமே திட்டம் மற்றும் ரூ.100 கோடி மதிப்பீட்டிலான நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

சேலம் சீலநாயக்கன்பட்டி திடலில்  நடைபெற்ற நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ரூ.300 கோடி மதிப்பில்  நமக்கு நாமே திட்டம் இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் ஒரு பகுதியில்  மக்கள் தங்கள் தேவைகளை அரசின் உதவியுடன் பூர்த்தி செய்துகொள்ளும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை உட்பட அனைத்து மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் மற்றும் 528 டவுன் பஞ்சாயத்துகளிலும் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, நகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை புனரமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்துதல், மரம் நடுதல், பள்ளிகளை மேம்படுத்துதல், பொது சுகாதார மையங்கள், சாலைகள், தெருவிளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக நமக்கு நாமே திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளன.

இதைத்தொடர்ந்து இதே விழாவில் ரூ.100 கோடி மதிப்பில் தமிழகம் முழுவதும் நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தையும்  முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 

மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் கிராமங்களில் லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், நகரங்களில் உள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தற்போது `நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம்' இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், வடிகால்கள், சாலைகள், கட்டிடங்களை அமைத்தல், பராமரித்தல், நீர்நிலைகளைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தை பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்கள், இதர மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலம், 7 நகராட்சிகள், 37 பேரூராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

இந்த திட்டத்துக்காக, ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள வேலைதேடுவோர் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணியாளர் அட்டை வழங்கப்பட உள்ளது.பெண்களுக்கு 50 சதவீதத்துக்கு குறையாமல் பணி வழங்கப்படும். அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம், அவர்களது பணிகளின் அடிப்படையில் வழங்கப்படும்.

பணியாளர்களுக்கான குறைதீர் அமைப்பும் உருவாக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகள் ஆண்டு திட்டம் தயாரித்து, இயற்கை வள மேலாண்மை, வெள்ளத் தடுப்பு மற்றும் இதர பணிகள் என்ற அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளபடவுள்ளது. இதைக் கண்காணிக்க மாநில அளவிலான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திட்டத்துக்கான நிதியில் 85 சதவீதம் தமிழக நிதிநிலை அறிக்கை மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 சதவீதம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News