சேலத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சேலத்தில் நடைபெற்ற விழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.;
சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. ஒரே இடத்தில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
குறிப்பாக ரூ.261 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கியும், முடிவுற்ற திட்டப்பணிகள் திறந்து வைத்தல், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்டவைகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.
இதில் போக்குவரத்துத் துறை, கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பள்ளிக் கல்வித்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வேளாண்மை பொறியியல் துறை, பதிவுத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.54.01 கோடி மதிப்பீட்டில் 60 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.இதேபோன்று பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.38.53 கோடி மதிப்பீட்டில் 83 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் கே.என்.நேரு, எ.வ.வேலு, பன்னீர்செல்வம், பொன்முடி, முத்துசாமி, சாமிநாதன், காந்தி, மதிவேந்தன், கயல்விழி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.