சேலத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்ட மூதாட்டியிடம் 4 சவரன் நகை பறிப்பு
சேலத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்ட மூதாட்டியிடம் 4 சவரன் நகை பறிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
சேலம் செவ்வாய்பேட்டை மூங்கப்பாடி பகுதியை சேர்ந்தவர் சூரியகோபால் மனைவி பத்மாவதி(73). கணவனை இழந்த இவர் நேற்று மாலை 5.30 மணியளவில் உறவினர் ஒருவருடன் தனது வீட்டில் இருந்து கிளம்பி பஜனைமட தெருவில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். இந்த பகுதியானது குடியிருப்புகள் நிறைந்த பகுதி. எந்த நேரமும் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும்.
இந்தநிலையில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் அப்பகுதியை நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, பத்மாவதி வருவதை அறிந்த அந்த நபர்கள் இருசக்கர வாகனத்தில் பத்மாவதி அருகில் வந்து அவர் அணிந்திருந்த 4 சவரண் நகையை பறித்துள்ளனர். இந்த சம்பவத்தில் பத்மாவதிக்கு கழுத்தில் சிறிது காயம் ஏற்பட்டுள்ளது.
பத்மாவதி கூச்சலிட்டத்தை கண்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து பத்மாவதி செவ்வாய்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
நகைபறிப்பு சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி காமிரா இருந்ததால் கொள்ளையர்களின் நகைபறிப்பு சம்பவம் அதில் பதிவாகி உள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்தவர்களில் வாகனத்தை ஓட்டி வந்தவர் தலைகவசம் அணிந்துள்ளார். பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் தலைகவசம் அணியவில்லை. அவர்தான் நகையை பறித்துள்ளார். சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு அடையாளம் காணப்பட்டதில் இதே நபர்கள் சேலம் மாநகரில் கொண்டலாம்பட்டி, அழகாபுரம், அஸ்தம்பட்டி பகுதிகளில் நகைபறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதற்கு முன் நடந்த நகைபறிப்பு சம்பவங்களில் கொள்ளையர்கள் தெளிவாக அடையாளம் காணப்பட முடியாத நிலையில், நேற்று நடந்த சம்பவத்தில் கொள்ளையர்களில் ஒருவர் சற்று அடையாளம் காணும்படி உள்ளதால் இம்முறை கொள்ளையர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.