பயணிகள் வருகை குறைவு: சேலம் - சென்னை விமான சேவை 31ம் தேதி வரை ரத்து
முழு ஊரடங்கு காரணமாக பயணிகள் வருகை இல்லாததால் சேலம் - சென்னை இடையே விமான சேவை வரும் 31 ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.;
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினசரி பயணிகள் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 10 நாட்களுக்கு பிறகு கடந்த 23 ம் தேதி மீண்டும் விமான சேவை துவங்கியது. முதல் நாள் சென்னையில் இருந்து 16 பயணிகளுடன் விமானம் சேலம் வந்தது. தொடர்ந்து நேற்றைய தினம் வெறும் 3 பயணிகளுடனே விமானம் சென்னையில் இருந்து சேலம் வந்தடைந்தது. தொடர்ந்து பயணிகள் வருகை இல்லாததால் வரும் 31 ம் தேதி வரை சேலம் - சென்னை இடையேயான விமான சேவை ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.