ஓமலூர் அருகே எம். செட்டிபட்டியில் நடந்த மாட்டுச்சந்தையில் ரூ. 1 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே எம்.செட்டிபட்டியில் உள்ள பெருமாள் கோயிலில் தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற மாட்டு சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் கூடுவது வழக்கம். இந்த சந்தைக்கு ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள், வாகன சோதனை உள்ளிட்ட நடைமுறைகளால் வெளிமாநிலங்களில் இருந்து கால்நடைகள் வரத்தும், வியாபாரிகள் வரத்தும் சரிந்தது. இதனால், கடந்த ஒரு மாதமாக கால்நடை விற்பனை மந்தமாகவே இருந்தது.
தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நேற்று கூடிய மாட்டுச்சந்தை களை கட்டியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்து குவித்தனர். இதேபோல், பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகளும் வந்திருந்தனர். இதில், பால் மாடுகள், இளம் கன்றுகள், வெட்டு மாடுகள் என சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் விற்பனை நடைபெற்றுள்ளது. அதேபோல், ஒரு ஜோடி காளைகள், 2 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேர்தல் நேர கெடுபிடிகளால் பாதிப்பிற்குள்ளான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் நேற்று கூடிய சந்தையில் அதிகளவில் மாடுகள் விற்பனையானதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேநேரம் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல் சந்தை கூடியுள்ளது. கொரோனா பாதுகாப்பு விதிகளை நடைமுறைப்படுத்தாமல், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டியது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.