ரூ.1 கோடி கேட்டு கரூர் கல்குவாரி அதிபர் சேலத்தில் அடித்துக்கொலை
கரூரை சேர்ந்த கல் குவாரி அதிபர், ரூ. 1 கோடி கேட்டு, சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே அடித்து கொல்லப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தென்விழை பகுதியில், நாச்சியார் கவுண்டர் மகன் சாமிநாதன் (65) கல் குவாரி நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த விஜய் (25) மற்றும் நவீன் (21) ஆகியோர், சாமிநாதன் கல் குவாரியில் டிப்பர் லாரி டிரைவராக வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று கல் குவாரி அதிபர் சாமிநாதனை, டிரைவர்கள் விஜய், நவீன் ஆகியோர் அதே லாரியில் கடத்தி சென்று, அடித்து கொலை செய்துவிட்டு, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தலைவாசல், தேசிய நெடுஞ்சாலையில் அருகே வனப்பகுதியில் உடலை வீசி செல்ல லாரியை சாலையோரம் நிறுத்தி முயற்சித்தனர். அப்போது, பின்தொடர்ந்து வந்த கரூர் மாவட்ட தனிப்படை போலீசார் மற்றும் தலைவாசல் போலீஸார் ஆகியோர், சுற்றி வளைத்தபோது இருவரும் தப்பி ஓட முயன்றுள்ளனர். அப்போது கொலையாளிகளை காவல்துறையினர் விரட்டி பிடித்து கைது செய்தனர். பின்னர், சாமிநாதன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். கொலை சம்பவம் குறித்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், நேற்றுமுன்தினம் இரவு, குவாரியில் இருந்து கடத்தப்பட்டு, உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் ரூ 1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து தென்னிலை காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் தேடி வந்த நிலையில், தலைவாசல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டு கொலையாளிகளை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல் குவாரி தொழிலதிபரை கடத்தி கொலை செய்து, வனப்பகுதிக்குள் வீசமுயன்ற சம்பவம், சேலம், கரூர் மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.