மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் தாலுகா அலுவலகம்: ஊராட்சி தலைவர்கள் ஆட்சியரிடம் மனு

தலைவாசல் தாலுக்கா அலுவலகத்தை பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் விதமாக அமைக்கப்படுவதாக ஊராட்சி தலைவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Update: 2021-09-20 10:15 GMT

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த ஊராட்சி மன்ற தலைவர்கள்.

சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியை தனி தாலுகாவாக கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 4 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு தற்போது அரசு நிதி ஒதுக்கி உள்ளது. இதனையடுத்து, தலைவாசல் ஒன்றியத்தில் உள்ள கடைகோடி கிராமமான தேவியாக்குறிச்சி ஊராட்சியில் தாலுகா அலுவகம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தலைவாசல் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி தலைவர்கள் ஒன்று சேர்ந்து தாலுகா அலுவகத்தை தலைவாசல் பகுதியிலேயே கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அனைத்து ஊராட்சி தலைவர்களின் சார்பில் பட்டுதுரை, தலைவாசல், நாவக்குறிச்சி, பெரியேரி, வேப்பம்பூண்டி, வேப்பநத்தம், சிறுவாச்சூர் உள்ளிட்ட ஊராட்சி தலைவர்கள் இன்றைய தினம் சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தலைவாசல் ஊராட்சி மன்ற தலைவர் அசோக், தலைவாசலிலேயே தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு போதுமான இடவசதிகள் இருந்தும், தொலைவில் உள்ள தேவியாக்குறிச்சி பகுதியில் தாலுகா அலுவலகம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சரியான போக்குவரத்து இல்லாத அப்பகுதியில் தாலுகா அலுவலகம் கட்டினால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாக நேரிடும், எனவே புதிய தாலுகா அலுவலகத்தை தலைவாசலிலேயே கட்டிக்கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News