2ம் முறையாக நீட்தேர்வில் தோல்வி: சேலம் மாணவர் விஷம் குடித்து சாவு

சேலம் அருகே 2ம் முறையாக நீட்தேர்வு எழுதி தோல்வியடைந்ததால் விஷம் குடித்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2021-11-06 05:45 GMT

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள வடக்குமரை  கிராமத்தைச் சேர்ந்த  விவசாய கூலித்தொழிலாளர்கள்  கணேசன்-தனலட்சுமி தம்பதியின் மகன் சுபாஷ் சந்திர போஸ்.  ஏழ்மையான சூழலில் வளர்ந்த மாணவன் சுபாஷ்சந்திரபோஸ் மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்துள்ளார்.  

கடந்த 2019 ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு முடித்த சுபாஷ் சந்திரபோஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்காக முயற்சி செய்து வந்துள்ளார். முதல் முறை நீட்தேர்வில் 158 மதிப்பெண்களும், நடப்பு ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 261 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.  தொடர்ந்து இரண்டு முறையும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத காரணத்தால் கடந்த ஒன்றாம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்கள் மகனை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலத்தில்  தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  

ஏற்கனவே நீட் தேர்வு எழுத பயந்து சேலம் மேட்டூர் அருகே தனுஷ் என்ற மாணவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி இருந்த நிலையில், சேலத்தில் மேலும் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News