எடப்பாடியில் 2000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் கண்டுபிடித்து அழிப்பு
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில், 2000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை காவல்துறையினர் கைப்பற்றி அழித்தனர்.;
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கோணமோரிமேடு பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரி அருகே அடர்ந்த வனபகுதியில் உள்ள புதர்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாக எடப்பாடி காவல் ஆய்வாளர் பிராங்க்ளின் உட்ரோ வில்சனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல் ஆய்வாளர் மற்றும் அவர் தலைமையிலான காவல்துறையினர், வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கோணமோரி பாலம் அருகே சுமார் 1500 லிட்டர் அளவிற்கு கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக தயார் செய்து வைக்கப்பட்ட ஊறல் கண்டுபிடிக்கப்பட்டது. ஊறல் வைக்கப்பட்டிருந்த பகுதி கொங்கணாபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால், கொங்கணாபுரம் காவல் ஆய்வாளர் இளவரசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கொங்கணபுரம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர், சாராயம் காய்ச்சுவதற்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த ஊறல்களையும் அதற்காக பயன்படுத்தப்பட்ட அடுப்பு, பேரல்கள் உட்பட அனைத்தையும் அழித்தனர். இதுதொடர்பாக, சாராய வியாபாரி அண்ணாதுரை என்பவரை கொங்கணாபுரம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதேபோன்று, சங்ககிரி எல்லையான தேவனகவுண்டனூர், கிராமம் சரிபாரக்காடு பகுதியான சங்ககிரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கரட்டு பகுதியில் 500 லிட்டர் கள்ளச்சாராயம் தயாரிப்பதற்க்காக வைக்கப்பட்டிருந்த ஊறல்களை எடப்பாடி காவல் உதவி ஆய்வாளர் பெரிய தம்பி மற்றும் காவல்துறையினர் அளித்தனர்.
தற்போது, முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் மதுபானக்கடைகள் மூடப்பட்டு உள்ளதால், தமிழகத்தின் சில பகுதிகளில் மீண்டும் கள்ளச்சாராய தயாரிப்பு தலை தூக்குவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.