கலெக்டரை சந்திக்க வந்த கைம்பெண்ணை விரட்டிய அதிகாரி
கலெக்டரை சந்திக்க வந்த கைம்பெண்ணை அதிகாரி திட்டி விரட்டியதால் அழுதுகொண்டிருந்த சென்ற அவலம்
இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலூக்கா,சித்தஞ்சி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் கடந்த மேமாதம் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது மனைவி பூங்கொடி,தனது இருமகள்களை வைத்து கொண்டு ஆதரவின்றி வீட்டு வேலை செய்து கஷ்டப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது .
அதனால், விதவையான பூங்கொடி, தனது கணவர் இல்லாமல் இரு மகள்களை வைத்து மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும் தனக்கு ஆதரவு யாரும் இல்லை என்றும் அவர், 12ஆம் வகுப்பு வரைப் படித்துள்ளதாகவும் தனக்கு ஏதாவது ஒரு வேலைவாய்ப்பினை வழங்கிட வேண்டி கோரிக்கை மனுவினை எழுதி மக்கள் குறைத்தீர்ப்பு நாளான திங்கட்கிழமையன்று இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு சமூக நலத்துறை அலுவலத்திலிருந்து அழைப்பு வந்ததின் பேரில் அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்துள்ளார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது கஷ்டங்களைக் நேரில் சந்தித்து கூற அவரது அலுவலகம் முன்பாக உள்ள அலுவலக மேலாளர் பாபுவைசந்தித்து அனுமதிகேட்டுள்ளார்
அந்நேரம் மேலாளர் பாபு, ஏளனமாக பேசி பூங்கோடியை திட்டி விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ,பூங்கொடி செய்வதறியாமல் மனம் நொந்து வேதனையில் அழுதவாறே ,அலுவல் அறையிலிருந்து வெளியேறினார் . அப்போது அழுது கொண்டே வந்த பூங்கொடியின் பரிதாபநிலையைக்கண்ட அங்கிருந்தவர்கள் தேற்றினர். இருப்பினும் கணவரை இழந்து வாழ வழியின்றி வேலை கேட்டு வந்த விதவையிடம் பொறுப்புள்ள அதிகாரியான பாபு திட்டி விரட்டியடித்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
மேலும் இச்சம்பவம் ஆட்சியரின் பெயருக்கு களங்கத்தைஏற்படுத்தும் விதமாக உள்ளதாக அங்குள்ளவர்கள் கூறினர்.
எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் .அதேநேரத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகள் தீர்க்க ஒரே அதிகாரி மாவட்ட ஆட்சியர் என்ற நம்பிக்கையில் கோரிக்கைகளுடன் வரும் இது போன்று வாழ்வாதாரமிழந்து தவித்துவருபவர்களின் குறைகளைக் கேட்டு அதிகாரிகள் கனிவுடன் நடத்திட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.