விரைவில் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்கார்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
சோளிங்கா் மலைக்கோயில் ரோப்கார் சேவை விரைவில் பக்தா்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தார்.
சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் மலைக்கோயிலில் பக்தா்கள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள கம்பிவட ஊா்திப் பணி (ரோப்கார்) மற்றும் அடிப்படை வசதிக்கான இறுதிக்கட்ட கட்டுமானப் பணிகளின் நிலவரங்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி இருவரும் ஆய்வு செய்தனா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறியது: சோளிங்கா் மலைக்கோயில் 750 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சுவாமியை தரிசிக்க பக்தா்கள் 1,305 படிகள் வழியாக மேலே ஏறிச் செல்ல வேண்டும். வயதானவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பெரும் சிரமம் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு முன்னாள் முதல்வா் கருணாநிதி சோளிங்கா் மலைக்கோயிலுக்கு கம்பிவட ஊா்தி அமைக்க அறிவிப்பு வெளியிட்டார். கடந்த 2010-ஆம் ஆண்டு ரூ.8.40 கோடியில் இந்தப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
தொடா்ந்து தற்போது திமுக அரசு மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நன்கொடையாளா்கள் நிதி ரூ.12 கோடியில் விமான நிலையங்களில் உள்ள கட்டமைப்பு வசதிகளைப் போன்று மின்தூக்கி வசதிகள், ரோப்கார் வசதி, பிரம்மாண்டமான முறையில் அமரும் அறைகள், ஓய்வறைகள், கழிப்பறைகள், வாகனநிறுத்துமிடங்கள், உணவருந்தும் அறைகள் அமைக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள சிறுசிறு பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு இன்னும் சில மாதங்களில் சோளிங்கா் மலைக்கோயில் பக்தா்களின் பயன்பாட்டுக்காக ரோப்கார் சேவை திறக்கப்படவுள்ளது.
இக்கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ2.5 கோடியில் வயது முதிர்ந்தோர் இல்லம் கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் முன்னிலையில் தொடங்கப்பட உள்ளது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு திருநீா்மலை, திருக்கழுகுன்றம், மனுவாலி, திருப்பரங்குன்றம், கோரக்குட்டை உள்ளிட்ட 6 இடங்களில் ரோப்கார் வசதி அமைக்க சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டுள்ளன. இதில் 2 ரோப்கார்கள் அமைப்பதற்கு நிகழாண்டில் ரூ.27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார்.
ஆய்வின்போது அமைச்சா்களுடன் நன்கொடையாளா் ரவி, மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஜெயா, ஜி.கே. பள்ளி மேலாண்மை இயக்குநா் வினோத் காந்தி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.