சக்கரக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் 326 வாக்கு வித்தியாசத்தில் யாழினி வெற்றி
இராமநாதபுரம் ஒன்றியம் சக்கரக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் யாழினி வெற்றி.;
இராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த 9ம் தேதி நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணும் பசி நேற்று நடைபெற்றது.
இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் சக்கரக்கோட்டை ஊராட்சி, முதுகுளத்தூர் ஒன்றியம் மகிண்டி, திருவாடானை ஒன்றியம் பழங்குளம், ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் ஏ.ஆர் மங்கலம் ஆகிய 4 ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட ஊராட்சி கவுன்சில் 7 வது வார்டு உறுப்பினர், திருப்புல்லாணி ஒன்றியம் மாயாகுளம், கடலாடி ஒன்றியம் கடுகு சந்தை, ஆர்எஸ் மங்கலம் ஒன்றியம் சித்தூர்வாடி ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நடத்தப்பட்ட தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சக்கரக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் வாக்கு எண்ணும் காலை 8 மணிக்கு இராமநாதபுரம் அருகே புல்லங்குடி அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரியில் தொடங்கியது.
சக்கரக்கோட்டை ஊராட்சி மன்றத்தில் தலைவராக இருந்து மறைந்த புஷ்பவள்ளி என்பவரின் மகள் யாழினி 3,391 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக புஷ்பலதா 3,065, தீபிகா 153, ரஞ்சிதா 12, சுகந்தாள் 11 ஓட்டுகள் பெற்றனர். 85 ஓட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. யாழினி 331 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் தங்கபாண்டியன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.
கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று சில மாதங்களிலேயே உடல் நலக்குறைவால் உயிரிழந்த புஷ்பவள்ளி மகள் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற யாழினிக்கு சக்கரகோட்டை ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் முக்கிய பிரமுகர்கள் உறவினர்கள், வாழ்த்து தெரிவித்தனர். கூடுதல் ஆணையாளர் பாண்டி, துணை தாசில்தார் ஸ்ரீதர் உடனிருந்தனர்.