மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் தீயணைப்பு நிலையம்
சி.கே.மங்களத்தில் உள்ள தீயணைப்பு நிலையம் வெள்ளநீர் சூழ்ந்து தத்தளித்து வருகிறது
சி.கே.மங்களத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் வெள்ளநீர் சூழ்ந்து தத்தளித்து வருகிறது.
திருவாடானை தீயணைப்பு மற்றும் மீட்ப பணிகள் நிலையம் தற்போது சின்ன கீரமங்கலத்தில் இருந்து சேந்தனி செல்லும் சாலையில் புதிதாக 70.86 லட்சம் செலவில் கட்டப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டு அங்கு இயங்கிவருகிறது.
சேந்தனி தார்சாலையில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரம் சாலை வசதி ஏற்படுத்தவில்லை. அதனால் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக மீட்பு நிலையத்தை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. ஆபத்தில் இருப்பவர்களை மீட்பதற்கு தீயணைப்பு மீட்பு படையினர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தற்போது சூழ்ந்துள்ள வெள்ள நீரால், தீயணைப்பு நிலையம் தத்தளித்து வருவதுடன் அவசரகால மீட்புப்பணிக்குச் செல்வதில் சிக்கல் நீடிப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.
தீயணைக்கும் வாகனத்தையும் புதிய அலுவலகத்தில் இருந்து விரைந்து கொண்டு செல்ல முடியாமல் போகலாம் என்பதால் மழை பெய்வதற்கு முன்பே தார்ச்சாலையில் கொண்டு வந்து நிறுத்தி வைத்துள்ளனர். புதிய கட்டிடத்தில் தீயணைப்பு மீட்பு நிலையம் அலுவலகம் செயல்பட்டு வரும் நிலையில், அங்கு வரும்அவசர அழைப்புகளுக்கு அலுவலகத்திலிருந்து அரை கிமீ தொலைவுள்ள சாலைக்கு வந்து வாகனத்தை எடுப்பதற்கு தாமதம் ஏற்படுகிறது. இதனால் உரிய நேரத்தில் மீட்புப்பணிகளுக்கு செல்ல முடியவில்லை எனவும் கூறப்படுகிறது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து துரிதமாக சாலை அமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.