ஆபத்தான நிலையில் அரசுப் பள்ளிக் கட்டிடம்: பயத்தில் பக்கத்து வீட்டில் பாடம் நடத்தும் அவலம்
எப்போது வேண்டுமானாலும் இடியும் ஆபத்தான நிலையில் உள்ளதால் அருகில் உள்ள வீட்டில் மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.;
திருவாடானை அருகே சம்பூரணி கிராமத்தில் பள்ளிக் கட்டிடம் இருந்தும் வீட்டில் பாடம் நடத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகள் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா மங்கலக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சம்பூரணி கிராமத்தில் 37 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த தொடக்கப்பள்ளி கடந்த 2015-16 ஆம் ஆண்டுகளில் இடியும் தருவாயில் இருந்த நிலையில், ஊர் பொதுமக்கள் இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்ளதாகவும் அதன் பேரில் வந்து பார்வையிட்ட அதிகாரிகள் மராமத்து செய்தால் போதும் என கூறி, வெறும் மராமத்து மட்டுமே கடமைக்காக ஏதோ செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. மேலும் மழைகாலங்களில் எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர். அரசு கட்டிடம் இருந்தும் ஆபத்தான நிலையில் உள்ளதால் அருகில் ஒரு வீட்டில் மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதனை கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆபத்தான பள்ளிக் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய பள்ளிக் கட்டிடம் கட்டித்தர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.