இடி தாக்கி உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்திற்கு ரூ.8 லட்சம் நிதியுதவி
திருவாடானை அருகே இடி தாக்கி இறந்த இரண்டு பேரின் குடும்பத்திற்கு ரூ. 8 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் ஆகஸ்ட் 17 ம் தேதி தொடர் கனமழை காரணமாக இடி தாக்கியதில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த வழிமாத்தூர் கிராமத்தை சேர்ந்த பிச்சை மகன் மகாலிங்கம் உயிரிழந்தார்.
அதேபோல், செப்டம்பர் 17 ம் தேதி மழையின் காரணமாக இடி தாக்கியதில் பெரியகீரமங்கலத்தை சேர்ந்த பெரியய்யா மகன் பாண்டிச்செல்வம் 32 தனது வயலில் நெல் விதைத்துக் கொண்டிருந்தபோது உயிரிழந்தார்.
இதுகுறித்து திருவாடானை வட்டாட்சியர் அலுவலகம் மூலம் பேரிடர் நிவாரண நிதிக்காக பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதன்பேரில் திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர், தனித்துணை ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கந்தசாமி, திருவாடானை வட்டாட்சியர் செந்தில்வேல்முருகன் ஆகியோர் உயிரிழந்த இரு குடும்பத்திற்கும் தலா 4 லட்சம் வீதம் 8 லட்சம் ரூபாய்க்கான உத்தரவை இன்று வழங்கினர்.
இதனை மகாலிங்கத்தின் மனைவி ஜெயா, பாண்டிச் செல்வத்தின் மனைவி சூர்யா, தாயார் அழகம்மாள் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் வருவாய் துறை அதிகாரிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.