மாணவர் விடுதி வார்டனை சஸ்பென்ட் செய்து இராமநாதபுரம் ஆட்சியர் உத்தரவு
தொண்டி அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி வார்டனை சஸ்பென்ட் செய்து மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் உத்தரவிட்டார்.;
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே மீன்வளத்துறை, கால்நடைத் துறை மற்றும் பால்வளத் துறை சார்பில் பயனாளிகளுக்கு கடற்பாசி விதைகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பின்னர் தொண்டியில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் முறைகேடு நடப்பதாக புகார் வந்ததையடுத்து மாணவர் விடுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு இருந்த விடுதி வார்டன் சண்முகராஜிடம் மாணவர்கள் எண்ணிக்கை, என்னென்ன உணவுகள் வழங்கப்படுகிறது, காய்கறிகள், அரிசி, பருப்பு ஆகிவற்றின் தரம் குறித்தும் வரவு செலவு கணக்கு குறித்தும் கேட்டார். அப்போது விடுதி வார்டன் சண்முகராஜ் சரிவர கூறாமல் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். செலவு கணக்குகளில் முறைகேடு நடந்ததை கண்டறிந்த மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் உடனடி நடவடிக்கையாக வார்டன் சண்முகராஜை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மேலும் இதுபோன்று செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மக்கள் தங்கள் பகுதி பிரச்சனைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தனக்கு தகவல் தெரிவிக்குமாறும் தெரிவித்தார்.