சாலையை சீரமைப்பது பேரூராட்சியா? ஊராட்சியா? குழப்பத்தில் அதிகாரிகள்: குமுறும் மக்கள்

சாலையை சரிசெய்வது பேரூராட்சியா? ஊராட்சியா? என்ற குழப்பத்தில் உள்ளனர். புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

Update: 2021-11-16 06:58 GMT

விஸ்வநாதனேந்தல், கூத்தன்வயல் ஆகிய இரு கிராமங்களுக்கு செல்லும் சாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி - மதுரை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பெருமானேந்தல் ஆரம்ப பள்ளி அருகே செல்லும் பிரிவு சாலையானது விஸ்வநாதனேந்தல், கூத்தன்வயல் என இரு கிராமங்களுக்கு செல்லும் சாலையாக உள்ளது. இந்த கிராமங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் தார்சாலை இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ள சாலையாக பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.

தற்போது அச்சாலை குண்டும் குழியுமாக இருபுறமும் கருவேல மரங்கள் அடர்ந்து இருசக்கர வாகனத்திலும் நடந்தும் செல்ல முடியாத அவலநிலை உள்ளது. சில நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாவதும், தினசரி அரங்கேறி வருவதாகவும் வேதனையோடு தெரிவிக்கின்றனர். மேலும் பள்ளி மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை என்றும் இதனால் கூத்தன்வயல், விஸ்வநாதனேந்தல் உள்ளிட்ட பகுதி கிராமங்களுக்கு பள்ளி பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் வருவதில்லை என்று கூறுகின்றனர்.

இதுகுறித்து தளிர்மருங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் இராமநாதன் கூறுகையில்: பெருமானேந்தல் வரை தொண்டி பேரூராட்சி நிர்வாகம் நிர்வகித்து வருகிறது. அதனால் இந்த சாலையை சரிசெய்வது பேரூராட்சியா? ஊராட்சியா? என்ற குழப்பத்தில் உள்ளனர். இரண்டு அலுவலகங்களிலும் புகார் மனு கொடுக்கப்பட்டும் இன்று வரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே தொடர்ந்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டம் நடத்தவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். எனவே சாலையை விரைந்து சீரமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News