வங்கி ஊழியர் என கூறி பெண்ணிடம் ரூ.1 லட்சம் திருடி சென்ற நபர் கைது
ஆர்.எஸ் மங்கலத்தில் வங்கி ஊழியர் எனக்கூறி பெண்ணிடம் ரூ.1லட்சத்தை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.;
ஆர்எஸ் மங்கலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வங்கி ஊழியர் எனக் கூறி பெண்ணிடம் ரூ.1 லட்சத்தை திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட செட்டியமடையை சேர்ந்த மாரி மனைவி வசந்தி (37) இவர் தனது நகைகளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூபாய் 95 ஆயிரத்திற்கு அடகு வைத்திருந்த நிலையில் அதனை திருப்புவதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் 27ம் தேதி வங்கிக்கு வந்துள்ளார். அப்போது மர்ம நபர் தான் வங்கி ஊழியர் எனக் கூறி வசந்தியிடம் அறிமுகமாகி ரூபாய் ஒரு லட்சம் மற்றும் பாஸ் புக் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு அருகிலுள்ள ஜெராக்ஸ் கடையில் நகை திருப்புவதற்கான படிவம் இருப்பதாகவும் அதனை வாங்கி வரும்படி கூறியுள்ளார். அதை நம்பி சென்ற வசந்தி திரும்பி வந்து பார்க்கையில் அந்த மர்ம நபர் பணத்தை திருடிக்கொண்டு தப்பி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபரை தேடிவந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தனிப்பிரிவு காவல் சார்பு ஆய்வாளர் மாரி தலைமையில் சிரஞ்சிவி , பிரகாஷ், மகேஷ் ஆகிய தனிப்படை போலீஸார் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்த நிலையில் மர்ம நபர் ஏர்வாடியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற தனிப்படை மர்ம நபரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
பின்னர் ஆர்.எஸ்.மங்கலம் காவல்நிலையத்தில் வைத்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் வசந்தியிடம் பணத்தை திருடிச் சென்றது சிவகங்கை நேரு பஜாரை சேர்ந்த ஹனிபா ராவுத்தர் மகன் மீரா முகைதீன் (63)என்பதும் இவர் மீது பல்வேறு குற்றச் சம்பவங்கள் உள்ளதென்றும் பல்வேறு மாவட்டங்களில் பெயரை மாற்றிக் கொண்டு ஏராளமான பெண்களை ஏமாற்றி பல லட்ச ரூபாய் திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து மீரா முகைதீனை மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து திருவாடனை காவல் துணை கண்காணிப்பாளர் சின்னகண்ணு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவின்பேரில் திருவாடனை உட்கோட்ட காவல் பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும்.
அதனடிப்படையில் தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் மீரா முகைதீன் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற பல பெண்களை ஏமாற்றி பணம் திருடிச் சென்றவர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவதாகவும், எனவே பொதுமக்கள் மற்றும் பெண்கள் முகம் தெரியாத நபர்களிடம் ஏடிஎம் அட்டை மற்றும் வங்கி நகை பணம் ஆகியவற்றை கொடுக்க வேண்டாம் என்றும் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமாறு கேட்டுக் கொண்டார். வங்கி ஊழியர் எனக் கூறி பெண்ணிடம் 1லட்சம் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை விரைந்து கைது செய்த ஆர்.எஸ். மங்கலம் போலீசார் மற்றும் தனிப்படை போலீசாரை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.