தனியார் டிவி நிறுவனம் மீது நடந்த தாக்குதலை கண்டித்து செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தனியார் தாெலைக்காட்சி மீது நடந்த தாக்குதலை கண்டித்து இராமநாதபுரம் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
தனியார் தொலைக்காட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த 3ம் தேதி இரவு பட்டா கத்தியுடன் நுழைந்த ராஜேஷ்குமார் என்பவன் அங்குள்ள பொருள்களை சூறையாடியும், பணியில் இருந்தவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்தான். இந்த சம்பவத்தை பல்வேறு தரப்பினர் வன்மையாக கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று இராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தனியார் தலைமை அலுவலகத்தில் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தும், தாக்குதலில் ஈடுபட்ட ராஜேஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் இராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 25க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு தாக்குதலுக்கு எதிராகவும், ராஜேஷை குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரியும் கண்ட முழக்கங்களை எழுப்பினர்.