இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு; நாேய் தாெற்று பரவும் அபாயம்

இராமநாதபுரத்தில் நோய்த்தோற்றை தடுக்கவேண்டிய அரசு மருத்துவமனையிலேயே சுகாதார சீர்கேடு. டெங்கு பரவும் அபாயம்.;

Update: 2021-08-24 13:46 GMT

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவையொட்டி பல இடங்களில் மழைநீர் குளம் போல தேங்கி டெங்கு லார்வா கூடாரமாகவே மாறியிருக்கிறது.

இராமநாதபுரத்தில் கொரொனா பெருந்தோற்று குறைந்துவரும் சூழலில் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நோய்த்தோற்றை தடுக்கவேண்டிய மருத்துவமனையிலேயே சுகாதார சீர்கேடு காரணமாக டெங்கு கொசுக்களின் கூடாரமாக மாறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொரோனா நோய்த்தோற்று ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே பதிவாகி வருவதோடு, குணமடைவோரின் எண்ணிக்கையும், தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பது மாவட்ட மக்களிடையே நிம்மதி பெருமூச்சை ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதிலும் மேலுமொரு அதிர்ச்சியாக தற்பொழுது மழை காலம் துவங்கியிருக்கும் நிலையில் டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமான அளவு சீராக உயர்ந்து வருவது கவலையளிப்பதாக உள்ளது.

இந்த நிலையில் நோய்தோற்றை கட்டுப்படுத்தி நோயாளிகளை பாதுகாக்க வேண்டிய இராமநாதபுரம் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிலவிவரும் சுகாதார சீர்கேடு காரணமாக பல்வேறு நோய்த்தொற்றுகள் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்குவரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு பரவும் அவல நிலை உள்ளது. குறிப்பாக பிரசவம் மற்றும் குழந்தைகள் சிகிச்சை பிரிவையொட்டி பல இடங்களில் மழைநீர் குளம் போல தேங்கி டெங்கு லார்வா கூடாரமாகவே மாறியிருக்கிறது.

கொரொனா மட்டுமின்றி டெங்கு மலேரியா உள்ளிட்ட நோய்களையும் கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாக மற்றும் மருத்துவ துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் காய்ச்சளோடு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் கொரொனா மட்டுமின்றி மேற்கண்ட மூன்று நோய்களுக்கான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென தமிழக அரசு தெளிவாக அறிவித்தும் கூட அதிகாரிகளின் மெத்தனப்போக்கின் காரணமாக நோய்க்கு மருந்தளிக்க வேண்டிய மருத்துவமனையே நோய்களின் கூடாரமாக மாறியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News