இராமநாதபுரம் அருகே 2வீடுகளின் பூட்டை உடைத்து 22 லட்சம் நகைகள் பணம் கொள்ளை
இராமநாதபுரம் அருகே அடுத்தடுத்து இரு வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.22 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், பணம் திருட்டு.;
இராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள மேலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சீனி முகமது துபாய் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார், இவரது குடும்பத்தினர் மதுரையில் உள்ளனர். இந்த நிலையில் தனியாக இருந்த இவரது வீட்டை நோட்டமிட்ட ஆசாமிகள் சுமார் 4 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவு பூட்டு, பீரோ ஆகியவைகளை கடப்பாரை மூலம் உடைத்து, பீரோவில் இருந்த தங்க காசு ரூபாய் 20 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்கள் உள்ளிட்ட 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி உள்ளனர்.
இது தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில் மேலக்கோட்டை பகுதியில் உள்ள கிராம பொது மக்களிடம் இந்தப் பகுதியில் நடந்த திருட்டு சம்பவத்தை எச்சரிக்கை செய்து வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டியும், சந்தேகப்படும் நபர்கள் யாராவது இருந்தால் போலீசாருக்கு தகவல் கொடுக்குமாறு அறிவுறுத்தி சென்றனர்.
இதனடிப்படையில் மேலக்கோட்டை பகுதியில் பூட்டியிருந்த அகமது அலி என்பவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரின் வீட்டை வேலை ஆட்கள் திறந்து பார்த்தபோது, அந்த வீட்டிலும் கதவு மற்றும் பீரோவை உடைத்து சுமார் 40 பவுன் தங்க நகைகள் 50 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.
இதுதொடர்பான காட்சிகள் அப்பகுதியின் பள்ளிவாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது, இது தொடர்பாக ராமநாதபுரம் டிஎஸ்பி ராஜா தலைமையிலான போலீசார் இரு வீடுகளிலும் ஆய்வு செய்தனர். இரு வீட்டிலும் ஒரே கும்பலை சேர்ந்த நான்கு நபர்கள் திருடியது தெரிய வந்துள்ளது. இராமநாதபுரம் அருகே இரு வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வீடுகளிலும் மொத்தம் திருடுபோன நகையின் மதிப்பு ரூபாய் 22 லட்சமாகும். இது தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.