இராமநாதபுரத்தில் 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி பாராட்டு
இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 9 ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.;
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், மற்றும் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், ஆகியோர் முன்னிலையில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், 2021-ஆம் ஆண்டிற்கான 'டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது"-ஐ அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சார்ந்த 9 ஆசிரியர்களுக்கு வழங்கி பாராட்டினார்கள்.
குழந்தைகளின் வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல தொண்டு. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியறிவு வழங்குவதோடு, அவர்களது தனித்திறன்களை மென்மேலும் வளர்த்திடவும் சிறந்த குடிமக்களாக உயர்த்திடவும் அயராது உழைக்கிறார்கள்.
தமிழக அரசு வழிகாட்டுதலின்படி 9 முதல் 12ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் வகுப்புகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் 97% ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இவ்விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என இவ்விழாவில் கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் பேசினார்.
இவ்விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர்கள் முத்துசாமி, உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.