தமிழ்நாடு முழுவதும் 331 பேர் டெங்குவால் பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்
தமிழ்நாடு முழுவதும் 331 பேர் டெங்குவால் பாதிப்பு. அமைச்சர் மா.சுப்பிரமணியம் இராமநாதபுரத்தில் பேட்டி.;
தமிழ்நாடு முழுவதும் 331 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் இராமநாதபுரத்தில் பேட்டி.
இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியம் நேரில் ஆய்வு செய்தார். அங்கு உள்ள 865 பேருக்கு அனைவருக்கும் 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பதனை உறுதி செய்து இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து தேவிப்பட்டினத்தில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.
தடுப்பூசி முகாமை ஆய்வு செய்து பின் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்: வாரம்தோரும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதிலும் 5 வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. இதில் 30 ஆயிரம் இடங்களில் 46 லட்சம் பேருக்கு செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 6 லட்சம் பேர் கோவாக்சின் தடுப்பூசியும் 19 லட்சம் பேருக்கு கோவிட்ஷீல்ட் என 25 லட்சம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த காத்திருக்கின்றனர். அவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்த அளவில் 64 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பு ஊசியை செலுத்தி உள்ளனர்.
அதேபோல் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி அவர்களின் சதவீதம் 24 ஆக இருக்கிறது. இராமநாதபுரம் மாவட்டம் கடந்த நான்கு மெகா முகாம்களிலும் பெரிய அளவில் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. 59.19 % பேர் முதல் தவணையும், 18.74% பேர் இரண்டாம் தவணையும் மட்டுமே செலுத்தப்பட்டு உள்ளது. இது மாநில சராசரியைவிட குறைவு. இதை அதிகப்படுத்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இன்று ஒரே நாளில் 670 இடத்தில் 80 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 331 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக நன்னீரில் வளரும் ஏடிஎஸ் கொசுவை கண்டறிந்து அதனை அழிப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து பரவும் வைரஸ் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் செவிலியர்கள் பற்றாக்குறையை போக்க விரைவில் சுமார் 4900 செவிலியர்கள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். இராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் மட்டுமே தற்போது கிடைத்துள்ளது. மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் உள்ள குறைபாடுகளை சீர் செய்து அதற்குரிய ஆவணத்தை மத்திய அரசிடம் ஒப்படைத்து உள்ளோம். மேலும் 50 இடங்களை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.