திருவாடானையில் அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
திருவாடானையில் அதிமுக வேட்பாளர் ஆணிமுத்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.;
திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆணிமுத்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவர் இன்று திருவாடானை தேர்தல் அதிகாரி செந்தில் வேல் முருகன் இடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுவில் இவர் சட்டம் இளங்கலை மற்றும் முதுகலை பயின்றதாகவும், இவருக்கு ஒரு நான்கு சக்கர வாகனமும், விவசாய நிலங்களும் மற்றும் கடன் உள்ளிட்ட சொத்துக்களின் மொத்த மதிப்பு ஒரு கோடியே 22 லட்சத்து 67 ஆயிரத்து 710 ரூபாய் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வில் பாஜக சார்பில் குட்லக் ராஜேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர் ஆணிமுத்து திருவாடானை சட்ட மன்ற உறுப்பினர் ஆனவுடன் பட்டணம்காத்தன், சக்கரக்கோட்டை ஊராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம், திருவாடானையில் கோட்டாட்சியர் அலுவலகம், மகளிர் கல்லூரி ஆகியவை கொண்டு வருவதாக கூறிய அவர் மாநில அரசிடம் நிதியை பெற்று வைகை மற்றும் குண்டலாறை இணைந்து இராமநாதபுரம் மாவட்டத்திற்கும் திருவாடானை தொகுதி மக்களுக்கும் விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.