வெற்றி நடைபோடும் தமிழகம்: ஒன்றிய கூட்டத்தில் சலசலப்பு
இராமநாதபுரம்: திருவாடனை ஒன்றிய கூட்டத்தில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்று கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.;
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள ஒன்றிய குழு கூட்ட அரங்கில் திருவாடனை ஒன்றிய பெருந்தலைவர் முஹம்மது முக்தார் தலைமையில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலர் மேகலா வரவேற்புரையாற்றினார். தற்போது வேலை பார்த்த கண்மாய் மராமத்து பணி செய்யப்பட்டதற்கு நிதி வழங்கப்படுவதாக மன்ற பொருளியல் 50, 51 வாசிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக கவுன்சிலர் ஏற்கனவே தாங்கள் பார்த்துள்ள வேலைக்கே இதுவரை பணம் வரவில்லை, ஆனால் அதற்குப் பின்னர் தற்போது பார்த்த வேலைக்கு மட்டும் பணம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நாங்கள் ஏன் கவுன்சிலராக இருக்க வேண்டும். அஜந்தாவையும், மிக்சரையும், காபியையும் வீட்டிற்கு கொடுத்து அனுப்பிவிட்டால் நாங்கள் வீட்டில் இருந்து கொண்டு அதில் கையெழுத்து செய்வோம். இங்கு எதற்கு இந்த கூட்டம் என்று கூறினார். அதற்கு பதிலளித்த ஒன்றிய பெருந்தலைவர் முஹம்மது முக்தார் நிதி பற்றாக்குறையால் பணம் வழங்க முடியவில்லை என்று கூறும்போது, நிதியை அதிகம் பெற்றுத்தர அதிமுக நிர்வாகிகள் கவுன்சிலர்கள் அதற்கான முயற்சி எடுக்க வேண்டும் என்றும், அப்போது பேசிய ஒன்றிய பெரும்தலைவர் வெற்றி நடை போடும் தமிழகம் என்றெல்லாம் விளம்பரம் வருகிறது, நிதி தான் வரவில்லை என்று கூறினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த ஒன்றிய கவுன்சிலர் மதிவாணன் இது அரசையும் எங்களையும் புண்படுத்தும் விதமாக உள்ளது என்று மறுப்பு தெரிவித்தார். அதற்கு பதில் கூறிய பெருந்தலைவர் தவறான எண்ணத்தில் கூறவில்லை விளம்பரங்கள் வருகிறதே அதேபோல் நிதியும் வந்தால் நன்றாக இருக்கும் என்கிற அர்த்தத்தில் தான் கூறியதாக தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
மேலும் தமிழக அரசு விவசாய கடன்களை ரத்து செய்ததற்கு அதிமுக கவுன்சிலர்கள் சார்பில் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதின் பேரில் சிறப்பு தீர்மானமாக நன்றி தெரிவிக்கும் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேசிய கவுன்சிலர் முஹம்மது ரில்வான் இதற்கு நன்றி தெரிவிக்கும் போது டெல்லியில் போராடும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார். இதனால் அரங்கில் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது இறுதியாக மேலாளர் நன்றி உரையாற்றி கூட்டத்தை நிறைவு செய்தார்.