இராமநாதபுரம் மாவட்டத்தில் உரம் அதிக விலைக்கு விற்பனை: விவசாயிகள் வேதனை
இராமநாதபுரம் மாவட்டத்தில் உரத் தட்டுப்பாடு. தனியார் கடைகளில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் புகார்
இராமநாதபுரம் மாவட்டத்தில் உரத் தட்டுப்பாடு. தனியார் உரக் கடைகளில் குவிந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள். அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதாக புகார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, கீழக்கரை, திருவாடனை, பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், இராமநாதபுரம் உள்ளிட்ட தாலுகாக்கள் உள்ளது. இதில் மாவட்டம் முழுவதும் மானாவாரியாகவும் கண்மாய் நீர்ப்பாசனம் மூலம் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்தது.
இதனால் விவசாயிகள் பயிரிட்டு இருந்தநெற்பயிர்களில் மழைநீரை போதிய அளவு விவசாயிகள் தேக்கி வைத்துள்ளனர். இந்த நிலையில் நெற்பயிர்களில் தேங்கியுள்ள மழைநீரில் யூரியா உரங்கள் போடப்பட்டால் தான் பயிர்கள் நன்றாக வளர்ந்து நல்ல மகசூல் அடையும் நிலைக்கு வந்தடையும். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக கிராமப்புறங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளிலும், தனியார் உரகடைகளிலும் யூரியா, டிஏபி உரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் அலைந்து திரிந்து வருகின்றனர். இதையடுத்து முதுகுளத்தூரில் உள்ள தனியார் உரக் கடைகளில் உரங்கள் வாங்குவதற்காக ஏராளமான விவசாயிகள் ஒரே நேரத்தில் குவிந்து உர வாங்குவதற்காக விவசாயிகள் முந்தி அடித்து வருவதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது.
மேலும் ஒரு யூரியா உரம் அரசு சார்பில் 266 ரூபாய்க்கும், டிஏபி 1300 ரூபாய்க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தற்போது உரத் தட்டுப்பாடு ஏற்பட்டு ஒரே சமயத்தில் பெரும்பாலான விவசாயிகள் உரம் வாங்க குவிந்ததால் 266 ரூபாய்க்கு விற்க வேண்டிய யூரியா உரங்கள் 500 ரூபாய்க்கும், 1300 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய டிஏபி உரங்கள் 1700 ரூபாய்க்கும் அதிக விலைக்கு தனியார் உரக்கடைகள் விற்கப்பட்டு வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
தற்போது கடன் வாங்கி அதிக விலை கொடுத்தாலும் உரம் தங்களுக்கு கிடைப்பதில்லை என்று வேதனை தெரிவிப்பதோடு, தங்களுடைய பயிர்களுக்கு உரத்தை போட முடியாமல் மிகுந்த மன வேதனை அடைந்து வருகின்றனர் விவசாயிகள். இதற்கு மாவட்ட நிர்வாகம், வேளாண் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த விலையில் போதுமான உரங்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.