கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை
பிப்.4 வரை இதே நிலை நீடிக்கும் என்பதால் மன்னார் வளைகுடா குமரிக்கடல் பகுதிக்குள் மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது;
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று அதிகாலை இலங்கை கடற்கரை பகுதியில் கரையை கடந்ததால் டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து கடந்த 28 -ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது.
இதனையடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது இப்படி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இலங்கை கடற்கரையையொட்டிய பகுதிகளில் நேற்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது.
ஆனால் இன்று அதிகாலைதான் கரையை கடந்துள்ளது. இந்நிலையில் இதன் காரணமாக தமிழ்நாட்டின் தென்கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதன்கிழமை (பிப்.1) இரவு 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 115 கி.மீ தொலைவிலும், காரைக்காலிலிருந்து தென்கிழக்கே சுமார் 400 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து (பிப்.02) வியாழக்கிழமை அதிகாலைதான் இந்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது.இந்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று வரை தமிழ்நாட்டில் பெரிய மழை பெய்யவில்லை. டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் லேசான மழை பெய்தது. நேற்று மாலை வரை மேற்கு-வடமேற்கு திசையில் இந்த தாழ்வு மண்டலம் நகர்ந்தது. அதை தொடர்ந்து மேற்கு-தென்மேற்கு திசையில் இன்று அதிகாலை நகர்ந்து கரையை கடந்ததாக என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து நேற்று இரவு தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை விட்டு விட்டு பெய்தது.
இன்று அதிகாலையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகாலையில் இருந்து அங்கு மழை விடாமல் பெய்து வருகிறது. இதையடுத்தே டெல்டா மாவட்டங்களில் பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டைஆகிய மாவட்டங்களில் காலையில் இருந்து மழை பெய்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.அதேபோல இன்று (பிப்.02) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
தமிழக கடலோரப்பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மனிக்கு 40-45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இதே நிலை நாளையும் நாளை மறுதினமும்(பிப்.04 வரை) நீடிக்கும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில் நேற்று நாகை, வோளாங்கண்ணி, நாகூர் திட்டச்சேரி, கீழ்வேளூர், வலிவலம், எட்டுக்குடி போன்ற பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இன்று காலையிருந்தே புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது
சம்பா பயிர்கள் சாகுபடி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழவில் தற்போது திடீரென கனமழை பெய்திருந்தது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல திடீர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.