தேயிலைத் தோட்டங்களில் உலாவும் காட்டு யானைகள்: அச்சத்தில் ஊழியர்கள்
நீலகிரி தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், அங்கு பணிக்கு செல்லும் ஊழியர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் புல்வெளிகள் பச்சை பசேல் என பசுமையாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் கேரளாவில் இருந்து இடம் பெயரும் காட்டு யானைகள் நாடுகானி வழியாக கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் முகாமிட துவங்கியுள்ளன.
அவ்வாறு நான்கு குட்டிகளுடன், 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டம் கேரளாவில் இருந்து இடம் பெயர்ந்து சேரம்பாடி அருகே உள்ள தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் எலியாஸ் கடை பகுதியில் முகாமிட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பணிபுரியும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தனியாக நடமாடக்கூடாது எனவும், குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் உலா வந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் பெரும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கவும், குடியிருப்புகளுக்குள் நுழைவதை தடுக்கவும் வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், யானை விரட்டும் குழுவினர், அப்பகுதிகளில் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.