உதகையில் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்
சுற்றுலா பயணிகளுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி கலெக்டர் தெரிவித்தார்.
நீலகிரியில் 4 மாதங்களுக்கு பின்னர் சுற்றுலாத் தலங்கள் திறந்து செயல்பட்டு வருகிறது. தற்போது வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலாப் பயணிகளால் உள்ளூர் மக்களுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில், சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:
நீலகிரியில் கொரோனா பாதித்தவர்களுக்கு 3 மாதங்களுக்கு பின்னர் தடுப்பூசி செலுத்தப்படும். சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். நீலகிரி 2 மாநில எல்லைகளை ஒட்டி இருப்பதால், தொற்று பரவும் அச்சம் உள்ளது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால், உள்ளூர் மக்களுக்கு கொரோனா பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சுற்றுலா தலங்களுக்கு வெளியிடங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. முதல் மற்றும் 2-வது டோஸ் செலுத்திக் கொள்ளலாம். அதன்படி 27-ந் தேதி முதல் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ஊட்டி படகு இல்லம் ஆகிய 2 இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்குகிறது. இதன் வரவேற்பை பொருத்து மற்ற சுற்றுலா தலங்களில் நடமாடும் வாகனங்கள் மூலம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.