21 நாட்களாக தேடப்பட்ட புலி சிக்கியது: வனத்துறையினர் பிடித்தனர்

4 மனிதர்களையும் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்ற புலியை வனத்துறையினர் இன்று பிடித்தனர்.

Update: 2021-10-15 10:33 GMT

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 21 நாட்களாக ஒட்டுமொத்த வனத்துறைக்கு போக்கு காட்டி வந்த T23 ஆட்கொல்லி புலி சற்றுமுன் பிடிபட்டது..

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பகுதியிலும் மசனகுடி பகுதியிலும் தொடர்ந்து நான்கு மனிதர்களையும் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்ற ஆட்கொல்லி T23 புலி 20 நாட்களாக வனத்துறைக்கு சிக்காமல் இருந்தது.

கூடலூர் பகுதியிலும் மசன குடி வனப்பகுதியிலும் இடம்மாறி புலி சென்றதால் ஒட்டுமொத்த வனத்துறைக்கும் புலியை பிடிப்பதில் பெரும் சவாலாக இருந்தது.

இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன் கூடலூர் தேவன் எஸ்டேட், நம்பிக்குன்னு பகுதியிலும் அதைத்தொடர்ந்து நேற்று இரவு மசனகுடி வனப்பகுதிக்கு T 23 புலி இடம்பெயர்ந்தது.

இதையடுத்து நேற்று இரவு இந்த புலிக்கு இரண்டு மயக்க ஊசி செலுத்தப்பட்டது, அப்போதும் புலி வனத்துறைக்கு பிடிபடாமல் தப்பித்தது.

இன்று அதிகாலை முதுமலை செல்லும் வனசோதனை சாவடி அருகே காலை 10 மணி அளவில் சாலையை கடந்த புலியை வனத்துறையினர் கண்டனர். உடனடியாக புலியை பின்தொடர்ந்தனர். இதையடுத்து சுமார் ஆறு மணிநேர தேடுதலுக்கு பிறகு புலிக்கு மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

இதையடுத்து புலி பிடிப்பட்ட இடத்திலிருந்து வனத்துறை மூலம் கூண்டில் புலி ஏற்றப்பட்டுள்ளது, தற்பொழுது புலியை கொண்டுவரும் பணியில் ஒட்டுமொத்த வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது T23 புலியை முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லவதற்கான ஏற்பாடு நடை பெறுகிறது.



Tags:    

Similar News