உலமா மற்றும் பணியாளர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம்
தபால் மூலமோ அல்லது நேரிலோ அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்;
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வக்பு வாரிய நிறுவனங்களில் பணியாற்றும் உலமா மற்றும் பணியாளர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதி உள்ளவர்களுக்கு வாகனத்தின் மொத்த விலையில் ரூபாய் 25,000 அல்லது வாகன விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பதிவு செய்த நிறுவனங்களில் பணியாற்றும் உலமா மற்றும் பணியாளர்கள் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். 18 முதல் 45 வயதிற்குள் இருத்தல் வேண்டும். குறைந்தபட்ச கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு என்பதில் விலக்கு அளிக்கப்பட்டு குறைந்தபட்ச கல்வித்தகுதி தேவையில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆதார் அட்டை, வக்பு வாரிய அட்டை, ரேஷன் அட்டை, வருமானச் சான்று, வயது சான்று, புகைப்படம் மற்றும் மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்று, சாதி சான்று, ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. குறியீட்டுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், எத்தனை ஆண்டுகள் வக்பு வாரியத்தில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்று மாவட்ட வக்பு வாரிய கண்காணிப்பாளர் மேலோப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். வாகனம் வாங்குவதற்கான விலைப்புள்ளி இணைக்க வேண்டும். பயனாளிகள் இருசக்கர வாகனத்தை சொந்த நிதி ஆதாரத்தின் பெயரிலோ அல்லது வங்கிக் கடன் மூலமாக வாங்கலாம். முழு தொகையையும் செலுத்தி இருசக்கர வாகனம் வாங்கி இருப்பின் இதர தகுதிகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில் அதற்கான மானிய தொகை வழங்கப்படும். ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். தபால் மூலமோ அல்லது நேரிலோ அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.