விதிமுறைகளை மீறி வாகனங்களில் பொருத்திய கட்சி கொடிகள்,பம்பர்கள் அகற்றம்

சுற்றுலா வாகனங்களில் கட்சி கொடிகள், பம்பர்கள், அதிக ஒலி எழுப்பக் கூடிய ஒலிப்பான்கள் போன்றவற்றை போலீசார் அகற்றினர்.

Update: 2021-10-02 09:42 GMT

வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார்.

அரசியல் கட்சி சார்ந்தவர்கள் அல்லது மற்ற அமைப்பை சார்ந்தவர்கள் தங்களது சொந்த வாகனங்களில் கட்சி கொடிகள், பெயர்ப் பலகை ஆகியவற்றை பொருத்தி இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அதிக அளவு சத்தம் எழுப்பக் கூடிய ஒலிப்பான்கள், சைலன்சர்கள் போன்ற மாற்றங்களை வாகனங்களில் செய்யக்கூடாது உள்ளிட்ட மோட்டார் வாகன விதிமுறைகள் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை தீர்ப்பின் படி விதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தது. ஊட்டி சேரிங்கிராஸ் சந்திப்பில் வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், ஊட்டி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

வாகனங்களில் மோட்டார் வாகன சட்ட விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்று சோதனை செய்தனர். அப்போது பிற மாவட்டங்களில் இருந்து ஊட்டிக்கு வந்த சுற்றுலா வாகனங்களில் கட்சி கொடிகள், பம்பர்கள், அதிக ஒலி எழுப்பக் கூடிய ஒலிப்பான்கள், கண் கூசும் தன்மை கொண்ட அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் போன்றவை விதிமீறி இருந்தது தெரியவந்தது. அந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி கட்சி கொடிகள், பம்பர்கள், ஒலிப்பான்கள் போன்றவற்றை அகற்றினர்.

Tags:    

Similar News