மழையால் சேதமடைந்த சாலை ஜேசிபி மூலம் சீரமைப்பு
உதகை நகராட்சி மூலம் சாலையிலிருந்த மண்சரிவு ஜேசிபி மூலம் சரிசெய்யப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டது.
நீலகிரி நேற்று நள்ளிரவில் பல்வேறு இடங்களில் விடிய, விடிய இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. உதகை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பலத்த மழை காரணமாக உதகை ஆயுதப்படை வளாகத்தில் இருந்து புதுமந்து போலீஸ் குடியிருப்புக்கு செல்லும் சாலையில் விவசாய நிலத்தில் இருந்து மண்சரிந்து சாலையில் விழுந்தது.
சாலையின் குறுக்கே மண் குவிந்து கிடந்ததால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். தொடர்ந்து நகராட்சி பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் கிடந்த மண் அப்புறப்படுத்தப்பட்டது. அதே பகுதியில் மற்றொரு இடத்தில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு வசித்து வரும் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.