உதகையில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
இருதரப்பினா் ஒன்றாக இருந்து திருவிழாவை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டும் மற்றொரு தரப்பினர் திருவிழா நடத்துகிறது என குற்றச்சாட்டு.
நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா தற்போது நடைப்பெற்று வருகிறது. உதகை அருகே உள்ள சின்ன குன்னூர் என்னும் கிராமத்தில் 8 ஊர் சார்பாக திருவிழா நடப்பதாக இருந்தது.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹப்பன்கம்பை ஊர் மக்களுக்கு, ஹெத்தையம்மன் திருவிழாவில் பங்கு கொள்ள, மற்ற ஊர் மக்கள் அனுமதி வழங்குவதில்லை என கூறப்படுகிறது. இது குறித்து கோட்டாசியர் தலைமையில் 8 முறை பேச்சு வார்த்தை நடந்தும் முடிவு எட்டப்படவில்லை. இது குறித்து ஹப்பன்கம்பை மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தீர்ப்பில் இரு தரப்பினரும் சமாதானமாக அமைதியான முறையில் கோவில் திருவிழா நடத்த வேண்டுமெனவும் இல்லையெனில் திருவிழா நடத்த கூடாது என உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் சின்ன குன்னூர் பகுதியில் உள்ள அம்மன் கோவில் திருவிழாவை நீதிமன்ற உத்தரவை மீறி ஒரு தரப்பினர் மட்டும் திருவிழா நடத்துவதாகவும் , இதற்கு வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் உடந்தையாக இருப்பதாக கூறி மற்றொரு தரப்பினர் 100-க்கும் மேற்ப்பட்ட படுகரின மக்கள், இரவு 10 மணியளிவில் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்டனர்.
பின்பு ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து கோவில் திருவிழாவை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் , தங்களை சாதி பெயரை கூறி தகாத வார்த்தை பேசுவதை நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முற்றுகையிட்டனர். இரவு நேரத்தில் படுகரின மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவரத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.