உதகை மருத்துவ கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு வெள்ளை அங்கி வழங்கும் நிகழ்ச்சி

மாவட்டத்தில் மருத்துவ பணியாளர்கள் தங்கி பணிபுரிய தேவைப்படும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் -அமைச்சர்;

Update: 2022-04-17 15:10 GMT

உதகை அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டில் பயிலும் மாணவ மாணவியருக்கு வெள்ளை மேல் அங்கி அணிவிக்கும் விழா இன்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சி தலைவர் S.P. அம்ரித் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் கலந்துக்கொண்டு 149 மாணவ மாணவிகளுக்கு வெள்ளை அங்கி வழங்கினார். வெள்ளை அங்கி அணிந்து கல்லூரி முதல்வர் Dr. மனோகரி முன்னிலையில் மாணவர்கள் மருத்துவர் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர், நாட்டிலேயே மலை மாவட்டத்தில் தொடங்கப்பட்ட முதல் மருத்துவ கல்லூரி என்ற சிறப்பை உதகை மருத்துவ கல்லூரி பெற்றிருப்பதாக கூறினார். பின்தங்கிய மலை மாவட்டமாக இருந்த போதிலும் இங்குள்ள 37 ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிறப்பாக செயல்படுவதாக கூறினார். மலை மாவட்டத்தில் மருத்துவ பணியாளர்கள் தங்கி பணிபுரிய தேவைப்படும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வனத்துறை அமைச்சர் க. ராமச்சந்திரன், மருத்துவ கல்வி துறை இயக்குநர் Dr. நாராயணபாபு, மருத்துவ பணிகள் துறை இயக்குநர் Dr. செல்வ விநாயகம் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர், தமிழகத்தில் புதிதாக துவங்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளில் மத்திய அரசின் ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமலிருக்கும் 24 இடங்களை நிரப்பு மாநில அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளதாக கூறினார். அரசு பள்ளியில் பயின்று ஏழரை சதவிகித உள் ஒதுக்கீட்டில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 534 மாணவர்களுக்கு பாடங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட I Pad Tab விரைவில் வழங்கப்படவுள்ளதக கூறினார்,

கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்று 50க்கு கீழ் குறைந்துள்ள போதிலும் சுற்றியுள்ள நாடு மற்றும் மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிவது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியிருப்பதாக கூறினார்.

தமிழகத்தில் இரண்டாவது தவணை தடுப்பு ஊசி 77 சதவிகித பேர்களுக்கு செலுத்தப்பட்டிருப்பதாக கூறிய அவர், மாநிலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி 88 சதவிகிதமாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

Tags:    

Similar News