சுற்றுலா தலங்களை திறங்க ப்ளீஸ்... உதகையில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
அனைத்து சுற்றுலா தலங்களை திறக்க வலியுறுத்தி, உதகையில் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கொரோனோ இரண்டாம் அலை காரணமாக, அனைத்து சுற்றுலா தலங்களையும் மூட, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களை நம்பியுள்ள வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மலை மாவட்டமான நீலகிரியில், மாவட்டத்தில் பெரும்பாலும் சுற்றுலா தலங்களை கொண்ட மாவட்டமாக உள்ளது இந்த சுற்றுலா தலங்களை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு லட்சம் பேர் தங்களின் வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர் ,கோத்தகிரி, கூடலூர், உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
இதில் குறிப்பாக சுற்றுலா வாகன ஓட்டிகள், சாக்லேட்,வர்க்கி பிஸ்கட் தயாரிப்பாளர்கள் பின்னலாடை தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். எனவே சுற்றுலா தலங்களில் 50 சதவிகித சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரி, 500-க்கும் மேற்பட்டோர், உதகை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சுற்றுலா தலங்களில் தடையை நீக்கி தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகள் தெரிவித்தனர்.